Saturday, May 21, 2016


2016 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மூலம் வெளிப்பட்ட 'சிக்னல்';



அரசியல் வெளி (Political Space) காலியாகி விட்டதா?

அந்த அரசியல் வெற்றிடத்தை ஆக்கிரமிக்கும்,சமூக செயல்நுட்பம்?


‘அ.இ.அ.தி.மு.க கடந்த பாராளுமன்ற தேர்தலில் வென்ற சட்டமன்ற தொகுதிகளை விட , குறைவாக வென்றாலும், 2016 சட்டமன்ற தேர்தலில், ஆட்சியைப் பிடிக்கும்’ என்பதை, தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்பே, ஏற்கனவே பார்த்தோம்.

“வாக்காளர்கள்/வாக்குச்சாவடி வரையில், 'தத்தம் திறமைகளை', 'செயல்பூர்வமாக நிருபிப்பவர்களுக்கு' வளர்ச்சியும், இயலாதவர்களுக்கு வீழ்ச்சியும்,  என்ற 'பொறுப்பு கணக்கில்' (Accountability), அ.இ.அ.தி.மு.க மட்டுமே 'தன்னிகரில்லா' சாதனை படைத்து வரும் கட்சியாக இருக்கிறது; எவரையும் ஏற்றவும்/இறக்கவும் முடியும் என்ற வலிமையுள்ள தலைமையில். எனவே  மீண்டும் அவர் முதல்வராகும் வகையிலேயே, சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இருக்கும்;  கடந்த பாராளுமன்ற தேர்தலில் பெற்ற, சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்ற எண்ணிக்கையை விட, வாக்குகள் சேகரிப்பில், 'பொறுப்பு கணக்கில்' (Accountability), எந்த அளவுக்கு பலகீனமாகிறது? என்பதைப் பொறுத்து, குறைவாகவே பெற்றாலும்.”
(May 1, 2016; ‘தமிழக சட்ட மன்ற தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்?’;
http://tamilsdirection.blogspot.com/2016/05/blog-post.html  )

2011சட்டமன்ற தேர்தலில் 23 தொகுதிகளில் வென்ற தி.மு.க கூட்டணியானது, 2016 சட்டமன்ற தேர்தலில் 98 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. வாக்குகள் சேகரிப்பில், 'பொறுப்பு கணக்கில்' (Accountability), அ.இ.அ.தி.மு.க  எந்த அளவுக்கு பலகீனமாகியது ?, தி.மு.கவில் ஸ்டாலின் முயற்சியால்,  எந்த அளவுக்கு பலமானது? என்பதை, 2016 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் பிரதிபலிக்கிறதா? என்பதும் ஆய்விற்குரியதாகும். அவருக்கு, அ.இ.அ.தி.மு.கவைப் போல, கட்சிக்குள் 'தடைகளின்றி' செயல்பட வாய்ப்பிருந்திருந்தால், தி.மு.க இன்னும் அதிக இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சியைப் பிடிக்க போட்டி போடும் நிலைக்கு வந்திருக்கக் கூடுமா? என்பதும் ஆய்விற்குரியதாகும். இரண்டு கட்சிகளிலும், சில தொகுதிகளில், 'மிக அதிக வித்தியாசத்தில்' வெற்றி பெற்றதற்கு காரணம்; தொகுதி மக்களுக்கு சேவை செய்ததன் மூலமா? அல்லது  'திறமையான வலைப்பின்னல்’ மூலமா? என்பதும் ஆய்விற்குரியதாகும். அதே போல், உரத்தநாடு தொகுதியில், ஆளுங்கட்சியில் 'செல்வாக்கான அமைச்சர்' வேட்பாளர், அவரது சொந்த ஊர் தொகுதியில், தொகுதி மக்களிடம் நல்ல பேர் உள்ள தி.மு.க வேட்பாளரிடம் தோற்றதும், ஆய்விற்குரியதாகும். எந்த கட்சியாக இருந்தாலும், சாதாரண மக்களிடம் நல்ல பேர் எடுத்த வேட்பாளர்கள் வெற்றி பெறும் போக்கும் துவங்கியுள்ளதா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

தி.மு.க மற்றும் அ.இ.அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளுடன் கடந்த காலத்தில் கூட்டு சேர்ந்து விட்டு, மத்தியில் ஆட்சியில் 'பங்கும் அனுபவித்து' விட்டு, 2016 சட்ட மன்ற தேர்தலில் தோற்ற, கட்சிகளின் தலைவர்களில் சிலர், 'பணநாயகம்' வென்றது' என்று கருத்து தெரிவித்தால், அது சாதாரண மக்களிடம் எடுபடுமா? என்பது ஆய்விற்குரியதாகும்.

'வாக்களிப்பது ஜனநாயக கடமை' என்றும், 'வாக்குக்கு பணம் வாங்குவது தவறு'என்றும்,  2016 சட்டமன்ற தேர்தலில், இதற்கு முன் இல்லாத அளவுக்கு பிரச்சாரம் நடந்ததானது, மிகவும் பாராட்டத்தக்கதாகும்.

அவ்வாறு பிரச்சாரம் நடந்தும், சென்னையில் வாக்குப்பதிவு ஏன் குறைந்தது?

'வாக்குக்கான பண விநியோகம்' ஆனது, மற்ற இடங்களில் நடந்தது போல அங்கு நடைபெறவில்லையா?

அல்லது மற்ற இடங்களை விட, 'வாக்கிற்கு பணம் வாங்கும் அளவுக்கு', தேவையில்லாத 'நடுத்தர, மேல்தட்டு மக்கள்', மற்ற  பகுதிகளை விட, சென்னையில்  அதிகம் பேர் வாழ்கிறார்களா? அல்லது  'வாக்குக்கான பண விநியோகம்'  நடைபெறாமல் தடுப்பதில், அதிக அளவில், சென்னை கண்காணிக்கப்பட்டதா? என்பவையெல்லாம் ஆய்விற்குரியதாகும்.

1996 மற்றும் 2011 சட்டமன்ற தேர்தல்களில் 'கடும் அதிருப்தி' அலையில், ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய போக்கில், சென்னையில் 'நடுத்தர, மேல்தட்டு' மக்களில், அதிகம் பேர் வாக்களித்ததால், வாக்கு சதவீதமானது,  2016 தேர்தலை விட அதிகமாக இருந்ததா? என்பதும் ஆய்விற்குரியதாகும். 

இந்த தேர்தலில்,  அது போன்றோர்  ஏன்  வாக்களிப்பதில் ஆர்வம் காட்டவில்லை? என்ற கேள்விக்கு, தேர்தலுக்கு முன்னேயே, திரு.தங்கர்பச்சன் குழுவினர் மேற்கொண்ட முயற்சியில் வெளிப்பட்ட, கீழ்வரும் தகவல் கவனிக்கத்தக்கதாகும்.

படித்தவர்கள், வசதியானவர்கள் தான் வாக்களிக்க வருவதில்லை என்பதால், அப்படிப்பட்டவர்களைத் தேடித் தேடி சந்தித்தோம்.

ஊழல்வாதிகளையும், கொள்ளைக்காரர்களையும், மக்களைப் பற்றி அக்கறையில்லாதவர்களையும் தேர்ந்தெடுப்பதற்காக நாங்கள் வேலையையெல்லாம் போட்டு விட்டு வரிசையில் வெயிலில் நின்று காத்துக் கிடக்க வேண்டுமா?” என்று சொன்னவர்களே அதிகம். ‘‘நாங்கள் வாக்களித்தாலும் வாக்களிக்காவிட்டாலும் அப்படிப்பட்டவர்கள் தான் மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் எனும்போது, இந்த வாக்குரிமை எங்களுக்குப் பயன்படாத ஒன்று’’ என்று முகத்தில் அறைந்தது போல் சொன்னார்கள்."

பணம் வாங்கி வாக்குப் போட்டவர்களும்,  அது போன்ற காரணத்தையே சொன்னாலும் வியப்பில்லை.

இந்தியாவில் 2016 சட்டமன்ற தேர்தல் தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, புதுச்சேரி, அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் நடந்தது. அந்த 5 மாநிலங்களில், தேர்தல் கமிசன் கண்காணிப்பில், கைப்பற்றப்பட்ட சட்டவிரோத பணத்தில்,  தமிழ்நாடு முதல் இடத்தில் இருக்கிறது.


தமிழ்நாட்டில் 'அரசியல் நீக்கம்'  (Depoliticize) வளர்ந்த வேகத்தில், ஆதாயத்தொண்டர்கள் 'பலத்தில்', அரசியல் கட்சிகள் பயணித்து வருகிறார்களா?

தி.மு.க, அ.இ.அ.தி.மு.க ஆகிய‌, இரண்டு கட்சிகளிலுமே பெரும்பாலான தொண்டர்களும், தலைவர்களும் கொள்கை அடிப்படையில் தேர்தல்பணி ஆற்றினார்களா? அல்லது 'தலைமைக்கு விசுவாசம்' என்ற அடிப்படையில்,  'உழைப்புக்கு பலன் கிடைக்கும்' என்ற எதிர்பார்ப்பில், பணியாற்றினார்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும். அரசியல் வெளியில் (political space)  பயணிக்கும் கட்சிகளில், பெரும்பாலான தொண்டர்களும், தலைவர்களும்  கொள்கை அடிப்படையில், தேர்தல் பணியாற்றுவார்கள். 'அரசியல் நீக்கம்' (Depoliticize) போக்கில், அரசியல் வெளியை காலி செய்து பயணிக்கும் கட்சிகளில், அவர்கள் எல்லாம்,  'சுயலாப' நோக்கில், தேர்தல் பணியாற்றுவார்கள்; அதே நோக்கில் 'உள்குத்து' வேலைகளிலும் ஈடுபட்டு; தேர்தலில் ‘செலவழிக்க’ (?) கொடுத்த பணத்திலும் ஆட்டையைப் போட்டு.

அந்த இரண்டு கட்சிகளிலுமே,  'உழைப்புக்கு  பலன் கிடைக்கும்' என்ற எதிர்பார்ப்பில், பணியாற்றியவர்களே அதிகம் என்றால், ‘அரசியல் நீக்கம்’ (Depoliticize)  போக்கில்,  தங்களின் அரசியல் வெளியை (Political space) விட்டு, அந்த இரண்டு கட்சிகளும் வெளியேறிவிட்டதை,  அது உணர்த்தாதா?   

அந்த அரசியல் வெளியானது, இப்போதுள்ள கட்சிகளில், அல்லது, புதிதாக தொடங்கும் கட்சிகளில் ஒன்று, ஆக்கிரமிப்பதில் வெற்றி பெற்றால், அந்த கட்சி அடுத்த சட்டமன்ற தேர்தலில், நினைப்பதைவிட எளிதாக, ‌ ஆட்சியைப் பிடிக்க வாய்ப்புண்டா?

இப்போதுள்ள கட்சியாக இருந்தாலும், புதிதாக தொடங்கப்படும், கட்சியாக இருந்தாலும், அந்த அரசியல் வெற்றிடத்தை ஆக்கிரமிக்கும், சமூக செயல்நுட்பம் பின்வருமாறு.

1967க்குப்பின் அரசு துறைகளில் எந்த அளவுக்கு லஞ்சம் வளர்ந்துள்ளதோ, அந்த அளவுக்கு, அரசை மட்டும் நம்பாமல், 'செல்வாக்குள்ள' நபரின் தயவுடனேயே தான், கிராமம் வரை வாழ முடியும் என்ற நிலையில் தமிழ்நாடு உள்ளது.

பிறப்பு சான்றிதழ், பள்ளியில் சேர்த்தல், சாதி சான்றிதழ், வேலையில் சேர்தல், தொழில்/கடை தொடங்குதல், தெரு ஓரம் வியாபாரம், இறப்பு சான்றிதழ், காவல் நிலையம், நீதிமன்றம் என்று ஒரு மனிதர் பிறந்தது முதல் இறக்கும் வரை, இறந்து இறுதி சடங்கை நிறைவேற்றும் வரை, அந்தந்த காரியங்களுக்கு உதவும்  'செல்வாக்கான' நபரின்,  தயவு தேவைப்படுகிறது. 

அப்படிப்பட்ட 'செல்வாக்கான' நபர்கள் தெரு/கிராமம். வட்டம், மாவட்டம், மாநிலம் என்ற அடிப்படையில் வலைப்பின்னல் கொண்ட இரண்டு கட்சிகள் தி.மு.க மற்றும் அ.இ.அ.தி.மு.க ஆகும். அந்த கட்சிகள் தேர்தலுக்கு செலவழிக்கும் பணத்தை போல், பல மடங்கு பணத்தை வைத்திருக்கும் கட்சி கூட, அது போன்ற வலைப்பின்னலின்றி, அந்த பணத்தை வாக்குகளாக மாற்ற  முடியாது. அந்த வலைபின்னலை, கட்சிக்குள் தடைகளின்றி,  'முழு அதிகாரத்துடன்'  செயல்படுத்திய தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்குப் பின், அ.இ.அ.தி.மு.கவில் அடுத்து யார் இருக்கிறார்? குடும்பத்துக்குள் தடைகளுடன் செயல்பட்டு, ஆனாலும்  2016 தேர்தலில் 'சாதனை' வெற்றி பெற்றுள்ள ஸ்டாலினுக்குப் பின்,  தி.மு.கவில் அடுத்து யார் இருக்கிறார்? என்ற கேள்விகள்,  அந்த வலைப்பின்னலானது, மரண வாயிலில் நிற்பதை, குறிக்கிறதா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

1967க்குப்பின் அந்த வலைப்பின்னலில், எந்த அளவுக்கு, சுயலாப கள்வர் நோய் வளர்ந்துள்ளதோ, அந்த அளவுக்கு, குடிநீர் பிரச்சினை, சாலை பிரச்சினை,போன்ற இன்னும் பல தெரு/கிராம/உள்ளூர் பிரச்சினைகளும் வளர்ந்துள்ளன. அந்த வலைப்பின்னலை நம்பாமல், பாதிக்கப்பட்ட மக்கள், குறிப்பாக பெண்கள் வீதியில் இறங்கி போராடுவதும், அந்த அளவுக்கு அதிகரித்துள்ளது; அந்த வலைப்பின்னலை 'அரசியல் நீக்கம்'(Depoliticize)  நோய்க்குள்ளாக்கி.

அத்தகைய போராட்டங்கள் ‘மீடியா’ கவனத்தை ஈர்த்தவுடன், அதில் நுழைந்து ‘வெளிச்சம்’ போடுவதும், ‘மீடியா’ கவனம் குறைந்தவுடன், அதிலிருந்து விலகி, அடுத்த ‘வெளிச்சத்தை’ நோக்கி ஓடுவதுமான, 'அரசியல் நாடகங்களின்' காலமும், முடிந்து வருகிறது. அந்த வலைப்பின்னல் மூலம் 'உருவான', 'ஊழல் பணக்காரர்' குடும்ப‌ ஆடம்பர திருமணங்களில் கலந்து கொள்பவர்களிடையே, அந்த நபரின் 'கடந்த காலம்' பற்றியும்,  'என்னென்ன வழிகளில் சம்பாதித்தார்?' என்பது பற்றியும்,  'கிசு கிசு' பேச்சுகள் அதிகரித்து வருவதும்,  'புதிதாக' அரங்கேறிவரும் 'சொந்த காசில் சூன்யம் வைத்துக் கொள்ளும் சமுக நகைச்சுவை' ஆகும். அதன் தொடர்ச்சியாக, அந்த 'ஊழல் பணக்காரர்கள்' எல்லாம், 'விலை உயர்ந்த’  காரில்,  தெருவில் செல்லும் போது, தெரு ஓர தேநீர் கடைகளில், அந்த 'கிசுகிசு' பேச்சுக்கள்,  'உரக்க' பேசி, விவாதிக்கப்படுகின்றன. 

அத்தகையோரில்  'அதிபுத்திசாலிகள் சிலர், 'தமிழ், தமிழ் உணர்வு' 'புரவலர்களாக' வலம் வரும்போது, ஆங்கிலவழியில் கல்வி பயிலும்/பயின்ற மாணவர்கள் மத்தியிலும், 'ஆங்கிலத்தில்' பேச 'ஏங்கி வாழும்' சாதாரண மக்கள் இடையிலும், தமிழும், தமிழ் உணர்வும் கேலிப்பொருளாகி வருகின்றன. அதே சமுக செயல்நுட்பத்தில், ‘அரசியல் நீக்கம்’ (Depoliticize) போக்கில், தமிழ்/திராவிடக் கட்சிகளின் சமூக அடித்தளமானது ‘அரிக்கப்பட்டு’  வருகின்றன.

மாணவர்களிடமிருந்தும், சாதாரண மக்களிடமிருந்தும், 'அந்நியமாகி' உள்ள போக்கிலிருந்து, தமிழ் அமைப்புகள் மீள வேண்டுமானால், அந்த 'அதி புத்திசாலிகளின் சமூக நோய் தொடர்பிலிருந்து' விடுபட்டு, ஊழல் ஒழிப்பிலும் பங்கேற்று, தமிழ்வழிக்கல்வி அரசு பள்ளிகளை மரண வாயிலிலிருந்து மீட்பதற்கு,  முன்னுரிமை கொடுத்து செயல்பட வேண்டும்.

எந்த கட்சியும் கொள்கையும் சாராத, சாதாரண மக்களிடம் வெளிப்படும் 'சுயலாப நோக்கற்ற'  இயல்பான அன்பு, நேர்மை போன்றவை, ஒப்பீட்டளவில், கட்சி/கொள்கை ஆதரவாளர்களிடம் குறைவு என்பதும் எனது அனுபவமாகும். அது எந்த அளவுக்கு ‘அரசியல் நீக்கம்'(Depoliticize)  போக்குடன் தொடர்புடையது?  என்பதும் ஆய்விற்குரியதாகும். 'கொள்கைக்காக' மனிதர்களை மதித்த காலம் மாறி,  ‘அரசியல் நீக்கம்'  போக்கில், அவர்களை எல்லாம், 'பொதுவாழ்வு வியாபாரிகளாக', சாதாரண மக்களில் பெரும்பாலோர் கருதுகிறார்களா? என்பதும் ய்விற்குரியதாகும். கீழ்வரும் அடிமை கலாச்சாரமானது, ‘அரசியல் நீக்கம்' போக்குடன் தொடர்புடையதா?  என்பதும் ஆய்விற்குரியதாகும்.

“1967-க்கு முன் தமிழ்நாட்டின் அரசியல் கட்சித் தலைவர்களும் முதலமைச்சர்களும் ‘காமராசர், பக்தவத்சலம், அண்ணாதுரை’ என்றே அவர்களின் பெயர்களால் அழைக்கப் பட்டார்கள். இன்றைக்குத் திராவிடக் கட்சிகளின் தலைவர்களின் பெயரைச் சொன்னால் அவமரியாதை என்று கருதும் அளவுக்கு அடிமைக் கலாச்சாரப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.”

 (http://tamilsdirection.blogspot.com/2013/12/normal-0-false-false-false-en-us-x-none_4.html )

கடந்த பாராளுமன்ற தேர்தலில், இரண்டு திராவிடக்கட்சிகளைத் தவிர்த்து, மற்ற கட்சிகளில், அதிக வாக்கு சதவீதம் பெற்று, மூன்றாவது இடம் பிடிக்கும் அளவுக்கு(http://www.dnaindia.com/india/report-in-tamil-nadu-bjp-ranks-third-in-vote-share-1989154 ),  ‘கச்சத்தீவு உள்ளிட்ட  தமிழக மீனவர்கள் பிரச்சினைகள் தீர்க்கப்படும்’, ‘தமிழ்நாட்டு 'ஊழல் பெருச்சாளிகள்' தண்டிக்கப்படுவார்கள்'என்ற எதிர்பார்ப்பை, மோடி ஏற்படுத்தினாரா?

மோடி பிரதமரான பின், அந்த திசையில், அந்த 'நம்பிக்கைகள்', எந்த அளவுக்கு தமிழ்நாட்டில் பலகீனமாகியுள்ளதோ, அந்த அளவுக்கு, 2016 சட்டமன்ற தேர்தலில், பா.ஜ.கவின் வாக்கு சதவீதம் 'சரிந்துள்ளதா? என்பவையும் ஆய்விற்குரியவையாகும்.  


அந்த நம்பிக்கைகளை பூர்த்தி செய்து, 'பெரியார்' ஈ.வெ.ரா உள்ளிட்டு, தமிழ்நாட்டு 'பிரிவினை' தலைவர்களின் தியாகங்களை, அஸ்ஸாமில் 'அங்கீகரித்துள்ளது' போல அங்கீகரித்து, தமிழ் மொழி, பாரம்பரியம், பண்பாடு போன்றவற்றை 'மீட்பதிலும்', உண்மையான அக்கறையை செயல்பூர்வமாக நிருபித்தால்,  'அஸ்ஸாம் வழியில்', தமிழ்நாட்டில், அடுத்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க ஆட்சியைப் பிடிக்க வாய்ப்புள்ளது. ( ‘BJP had forged alliance with Assam Gana Parishad and Bodoland People’s Front which are prominent regional players. Their strategic expertise worked in BJP’s favour.’; http://www.abplive.in/india-news/five-reasons-why-bjp-won-assam-assembly-elections-345838)


அஸ்ஸாம் பிரிவினை நோக்கில் பயணித்த சர்பானந்த சோனோவாலை (Sarbananda Sonowal; https://en.wikipedia.org/wiki/Sarbananda_Sonowal ) பா.ஜ.கவில் சேர்த்து, முதல்வர் வேட்பாளராக  முன்னிறுத்தி, ‘பிரிவினை நோக்கில்’  பயணித்த கட்சிகளுடன் 'கூட்டணி' வைத்து, அஸ்ஸாமில் பா.ஜ.க ஆட்சியைப் பிடித்துள்ளது. இன்றுள்ள சர்வதேச அரசியல் சூழலில், 'பிரிவினையை' கைவிட்டு, 'இந்தியர்' என்ற அடையாளத்துக்கு இணக்கமாக(Harmony), 'தமிழர்', 'அஸ்ஸாமியர்' போன்ற இன்னும் பல 'உள் அடையாளங்களை' (Sub-Identity), அந்தந்த மொழி, பாரம்பரியம், பண்பாடுகளுடன் சேர்த்து வளர்ப்பதன் மூலமே, ‘இந்தியர்'  அனைவரும், சாதி/மத/மொழி உள்ளிட்ட ந்த அடிப்படையிலும்,  பாரபட்சமின்றி வளரமுடியும்,  என்பதை நிரூபிக்க, அஸ்ஸாமில், பா.ஜ.கவிற்கு அரிய வாய்ப்பு கிட்டியுள்ளது; வெளிநாட்டு நிதி உதவியில் செயல்படும் ‘பல்வேறு பிரிவினை சூழ்ச்சிகளிலிருந்து’,  இந்தியாவைக் காப்பாற்றி.


ஆனால் தமிழ்நாட்டில், தமது 'உழைப்புக்கு' (?) பலன்கள் எதிர்பார்த்து, திராவிடக்கட்சிகளின் வழியில், ‘குழு அரசியலில்’ பயணிக்கும், தமிழக பா.ஜ.க தலைவர்கள்,  அதற்கு வழி விட்டு ஒதுங்குவது கடினமே. (‘தமிழ்நாட்டில் மோடி அலை சந்திக்கும் ‘திராவிடச் சிக்கல்கள்’ ; 

http://tamilsdirection.blogspot.com/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_30.html )

ஊழல் பெருச்சாளிகள் தண்டிக்கப்படாமல், மேலே குறிப்பிட்ட ஊழல் வலைப்பின்னலிலிருந்து, தமிழ்நாட்டை மீட்க முடியாது. அவ்வாறு மீட்காமல், வாக்குகளுக்கு பணம் கொடுப்பதையும், வாங்குவதையும் ஒழிக்க முடியாது.
நமது குடும்பம், நட்பு, கட்சி உள்ளிட்ட சமூக வட்டத்தில் உள்ளோர், 'அந்த வலைப்பின்னலில்' இடம் பெற்று, நாமும் அதன் மூலம் பலன் பெற்று வாழ்ந்து கொண்டு, 'வாக்குக்கு பணம் வாங்குவது தவறு' என்றும், 'வாக்களிக்காதது தவறு' என்றும் சொல்லும் அருகதை நமக்கு உண்டா?


எனவே மேலே குறிப்பிட்ட ஊழல் செயல்பாடுகளை ஒழிக்காமலும், அடிமட்டத்தில் உள்ள பொதுப்பிரச்சினைகளில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து துணை புரிந்து, அப்பிரச்சினைகளை தீர்ப்பதில் தமக்குள்ள சுயலாபநோக்கற்ற சமுக அக்கறையை நிரூபிக்காமலும், பா.ஜ.க உள்ளிட்டு எந்த கட்சியும், இனி தமிழ்நாட்டில் வேர் பிடிக்க முடியாது.

காங்கிரசிலிருந்து திராவிட இயக்கம் நோக்கி, இடம் பெயர்ந்த, 'அரசியல் நீக்க உணர்ச்சிபூர்வ தனிநபர் விசுவாசம்' ஆனது, 'உரம்' பெற்று வளர்ந்து 
(http://tamilsdirection.blogspot.com/2015/07/normal-0-false-false-false-en-us-x-none.html), 

இடையில் தமிழ்நாட்டுக்கு வந்து 'சிக்கிய' ஈழ விடுதலை முயற்சியை சீர்குலைத்து, இன்று முற்று பெற்று, அரசியல் வெளியானது காலியாகி, சுயநல நோய்களுக்கு இடமில்லாதவாறு, சரியான அரசியலை எதிர்நோக்கி, வரவேற்க தமிழ்நாடு காத்திருக்கிறது. மேலே குறிப்பிட்ட 'ஊழல் வலைப்பின்னல்' மூலம் வரும் 'லாபங்களை' விரும்பி இழந்து, 'அந்த' வலைப்பின்னலின் வாடையின்றி, உண்மையான சுயமரியாதையுடன் வாழ்பவர்களை, அடையாளம் கண்டு மதிக்கும் போக்கானது,  சாதாரண மக்களிடையே, அதிகரித்து வருவதானது, அதன் அறிகுறியாகும்.

'தமிழ் அழிவு சுனாமி' தொடக்க அறிகுறிகள் பற்றிய புரிதலின்றி 
(http://tamilsdirection.blogspot.com/2013/11/normal-0-false-false-false-en-us-x-none_27.html), 

அறிவுபூர்வ விமர்சனம் மூலம் உரிய பாடங்கள் கற்று பயணிக்காமல், ஆங்கிலம் அறியாத, தமிழிலும் புலமையாளர்களின் நூல்களை படிக்கும்  அறிவில்லாத, 'சாகச' நோயில் சிக்கியவர்களின் 'ஆதரவை' பெரிதாக கருதி, 'உணர்ச்சிபூர்வமாக' பயணித்து, 'நோட்டா' வாக்கு சதவீதத்தை விட  குறைவாக ம.தி.மு.கவும், 'நாம் தமிழர்' கட்சியும் பெற்று, (http://www.dinamalar.com/news_detail.asp?id=1526924), வைகோவும்,  சீமானும்,  'அரசியல் முள்ளி வாய்க்காலை'  சந்தித்துள்ளார்களா? இல்லையா? என்பதும் ஆய்விற்குரியதாகும். சாதாரண மக்களும் சரி; மாணவர்களும் சரி; நேர்மையான சுய சம்பாத்தியத்துடன், 'ஆக்கபூர்வ’ செயல்களில் ஈடுபடுபவர்களையே மதிக்கிறார்கள்.   அறிவுபூர்வ பேச்சுக்களையும், எழுத்துக்களையுமே மதிக்கிறார்கள். 

நேர்மையான சுயசம்பாத்தியமும்,சமூக அக்கறையும் உள்ளவர்கள் தமிழ்நாட்டில் கணிசமாக இருப்பதானது, அண்மையில் வெள்ள நிவாரண முயற்சிகள் மூலம் வெளிப்பட்டது. பொது இடங்களில் திருடுபவர்களையும், பாலியல் வன்முறையில் ஈடுபடுபவர்களையும் பொதுமக்களே பிடித்து, உதைத்து, காவல் நிலையத்தில் ஒப்படைக்கும் செய்திகளும் அவ்வப்போது ஊடகத்தில் வெளிவருகின்றன.

ஊழலில் மூழ்கியுள்ள அரசும், சட்டமும், ஒரு  சாதாரண குடிமகனின் வாழ்வுரிமைகளை பாதுகாக்கும் வலிமையை இழந்துள்ள சமுக சூழலை, நன்றாக வெளிப்படுத்திய 'பாபநாசம்' திரைப்படமானது, வியாபார ரீதியில் வெற்றி பெற்றுள்ளதும் ஒரு நல்ல அறிகுறியே ஆகும்.

“ஊழலில் மூழ்கியுள்ள அரசும், சட்டமும், ஒரு  சாதாரண குடிமகனின் வாழ்வுரிமைகளை பாதுகாக்கும் வலிமையை இழந்துள்ள சூழலில், பிணம் தின்னும் கழுகுகள் போன்ற சிற்றினமாக‌, சோரம்  போகாமல், தனது குடும்பத்தை பாதுகாத்து, வாழ்வதற்கு  எவ்வளவு துயரங்கள் அனுபவிக்க வேண்டி வரும்? என்பதை தத்ரூபமாக வெளிப்படுத்திய படம் 'பாபநாசம்'. கூடுதலாக,'தமிழ், தமிழர், தமிழ்நாடு'  மீட்சிக்கும் பங்களித்து வாழ்வது சாத்தியமா? என்பதற்கான‌ விடைகளை, செயல் மூலம் வெளிப்படுத்துமாறு, நாம் எவ்வாறு வாழ முடியும்? என்பதை மேலே பார்த்தோம். 

அவ்வாறு வாழ்ந்து, குற்ற உணர்வின்றி, மனநிறைவுடன் மரணத்தை தழுவ முடியும். ஊழல் வலைப்பின்னலின் வாடையின்றி, உண்மையான சுயமரியாதையுடன் வாழ்பவர்கள் மட்டுமே, தமிழ்நாட்டில் 'போலி மரியாதையில்' சிக்காமல் வாழ்கிறார்கள். 'தமிழ், தமிழ் உணர்வு, தமிழ்வழிக்கல்வி' என்று எழுத்தில், பேச்சில் முழங்கிக் கொண்டு, தமிழ்நாட்டில் தமது குடும்பப்பிள்ளைகளை, ஆங்கில வழியில் படிக்க வைத்து (வெளிநாடுவாழ் தமிழருக்கு வேறு வழியில்லை), திரிந்த மேற்கத்திய பண்பாட்டில் சிக்க வைத்து, 'சோரம்' போய் சம்பாதித்த செல்வமும், செல்வாக்கும்,  நமது மரணத்திற்குப் பின் என்னாகும்? தமிழில் படிக்கவும், எழுதவும், பேசவும் தெரியாத, தமிழ் வேரழிந்த‌, நமது வாரிசுகளுக்கு, நாம் விட்டுச் செல்லும் களங்கமாக தொடராதா? குற்ற உணர்வுடன் தானே,  நமது மரணத்தை  நாம் சந்திக்க முடியும்? எனவே சோரம் போகாமல் வாழ்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது,  'தமிழ், தமிழர், தமிழ்நாடு'  மீட்சிக்கான வாய்ப்புகளும் அதிகரிப்பது உறுதியாகும்.  

No comments:

Post a Comment